மாற்றுத்திறனாளிகள் மனவளர்ச்சி குன்றியோர் பயன்பெறும் வகையில் மதுரை மாநகராட்சியுடன் சென்னை மிஷன், செல்லமுத்து அறக்கட்டளை ஆகிய இரு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

Published Date: May 31, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை வகித்தார். மேயர் வ. இந்திராணி, ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தொடர்ந்து மதுரை மாநகராட்சியுடன் சென்னை மிஷன் செல்லமுத்து அறக்கட்டளை ஆகிய நிறுவனங்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, உணவகம், மாற்றுத்திறனாளிகள்,   மனவளர்ச்சி குன்றியவர்களுக்காக வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையிலான புரிந்துணர்வு  ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்த ஆவணத்தை செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் ராமசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

இதன் மூலம் சென்னை மிஷன் நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதுடன் மாற்றுத்திறனாளிகள் பின்தங்கிய நபர்களை மேம்படுத்துவதற்காக பயிற்சி அடுமனை உணவு தயாரிப்பு முறைகள் குறித்து பயிற்சி ஆகியவை அளிக்கப்படவுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக இந்த உணவகம் ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனம் மூலம் மகிழ்ச்சி பள்ளி என்ற திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தப்படும். மது போதை பழக்கங்களுக்கு அடிமையான நபர்களுக்கு தொடர்ந்து இலவச சிகிச்சை அளிக்கப்படும். 

இந்த நிகழ்வில் மதுரை மத்திய மண்டல தலைவர் பாண்டிசெல்வி, தலைமை பொறியாளர் பாபு, துணை ஆணையாளர் செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் இயக்குநர்கள் ஜனார்தன் பாபு, செல்வமணி, சென்னை மிஷன் அறக்கட்டளை நிறுவனர் மகாதேவன், மேற்பார்வையாளர் சுப்ரமணியம், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Media: Dinamani